Blogs

முகுந்தமாலா-3(58)

मुकुन्द  मूर्ध्ना प्रणिपत्य याचे
भवन्त-मेकान्त-मियन्त-मर्थम् |
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे  मेsस्तु भवत्प्रसादात् || 3 ||

முகுந்த ! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தே
பவே பவே மே அஸ்து பவத் ப்ரஸாதாத் || 3 ||

[பொருள்]
ஹே முகுந்தா ! உம்மைத் தலையால் வணங்கி இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் யாசிக்கிறேன். உம்முடைய அருளால் எனக்கு ஒவ்வொரு பிறவியிலும் உனது திருவடித் தாமரைகளின் மீது மறவாமை இருக்கட்டும்.

[பதவுரை]
முகுந்த - முகுந்தனே !
மூர்த்நா - தலையால்
ப்ரணிபத்ய - வணங்கி
பவந்தம் - உம்மை
இயந்தம் - இவ்வளவு மட்டுமான
ஏகாந்தம் - ஒரே முடிவான
அர்த்தம் - பொருளை
யாசே - யாசிக்கிறேன்
பவத் ப்ரஸாதாத் - உம்முடைய அருளால்
த்வச்-சரணாரவிந்தே - உமது திருவடித் தாமரைகளின் மீது
மே - எனக்கு
பவே பவே - ஒவ்வொரு பிறவியிலும்
அவிஸ்ம்ருதி: - மறவாமை
அஸ்து - இருக்கட்டும்

[ஒப்புநோக்கு]
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு  உற்றோமே ஆவோம்; உமக்கே நாம் ஆட்செய்வோம்" என்ற ஆண்டாள் திருப்பாவையில் அருளியிருப்பதை ஒப்புநோக்கலாம்.

மதுரகவி ஆழ்வார் தனியன்(53)

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.

[பொருள்]
வேதங்களைத் தமிழ் மொழியில் அளித்த குருகூர் சடகோபரான நம்மாழ்வாரே எங்கள் வாழ்வு என்று இருந்த மதுரகவியாழ்வார் எங்கள் சுவாமி ஆவார்.
நம்மாழ்வாரை அன்றி வேறு ஒன்றையும் அடைக்கலமாகக் கொள்ளாத மதுரகவியாழ்வாரே எங்களுக்கு கதியாவார்.

"வண்குருகூர் ஏறு" - ஆதிநாதப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் பெருமை வாய்ந்த திருக்குருகூர் நம்பி (நம்மாழ்வார்)
"வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்" - இதுவும் நம்மாழ்வாரையே குறிக்கும்.
நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் நான்கு. அவையாவன:
1) திருவிருத்தம்
2) திருவாசிரியம்
3) திருவாய்மொழி
4) பெரிய திருவந்தாதி

இவை நான்கும் வேதங்களின் சாரமாக வைணவப் பெரியோர்களால் கருதப்படுகின்றன.

மதுரகவி ஆழ்வார்(54)

"குருகூர் சடகோபன்" என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார், திருக்கோளூர் திவ்ய தேசத்தில், சித்திரை மாதம் சித்திரை நன்னாளில் அவதரித்தார். உயர்ந்த ஞானமும் வைராக்கியமும் திருமால் பக்தியும் பெற்றவராய் இருந்ததோடு அல்லாமல் செவிக்கினிய கவி பாடுவதிலும் திறன் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அந்தக் காரணம் பற்றி "மதுரகவி" என்றும் பெயர் பெற்றார்.

இவர் நம்மாழ்வாரை குருவாக அடைந்தது ஓர் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை வடநாட்டில் உள்ள திவ்ய தேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். ஒரு சமயத்தில் அயோத்தியில் தங்கி இராம பிரானையும் பிராட்டியையும் மங்களாசாசனம் செய்து வந்த காலத்தில் ஒரு நாள் இரவு, தன் சொந்த ஊரான திருக்கோளூர் பெருமான் நினைவு பெற்றவராய் தெற்கு நோக்கி தொழுதார். அப்பொழுது வானில் ஒரு அதிசயமான ஒளிக்கற்றையை கண்ணுற்றார். இந்த நிகழ்ச்சி அடுத்த சில நாட்களும் தொடர்ந்து நடைபெற, அந்த அற்புதமான ஜோதி தனக்கு ஏதோ செய்தி தெரிவிப்பதாக உணர்ந்தார். தொடர்ந்து அந்த அதிசயமான ஜோதி தெற்கு நோக்கி பயணம் செய்வதை உணர்ந்து, தெய்வத்தின் செயல் என எண்ணி அதனை பின் தொடர்ந்தார்.

பல நாட்கள் கழித்து திருக்கோளூர் அருகில் உள்ள தென் குருகூர் நகரை அடைந்தார். "இந்த ஊரில் என்ன விசேஷம்?" என்று ஊர் மக்களை வினவ, அவர்கள் "ஆதிநாதர் கோயிலில் புளிய மரம் விசேஷம். நீரே சென்று காணும்" என்று பதில் உரைக்க உடனே கோயிலுக்கு விரைந்து சென்று ஓர் அதிசயத்தைக் கண்டார். புளிய மரத்தின் பொந்தில் இருந்து கொண்டு, சாதாரணமாக உயிர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் எதுவும் இல்லாமல், எப்பொழுதும் இறையனுபவத்தில் திளைத்திருந்த நம்மாழ்வாரைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் பிறவிப் பயனை அடைந்தோம் என்று பேருவகை எய்தினார். நம்மாழ்வாருடன் உரையாடல் மேற்கொண்டு, ஆத்ம தத்துவம் குறித்து அதுகாறும் தனக்கு இருந்த அக்ஞானம் நீங்கப் பெற்றவராய், "அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும்" என்று நம்மாழ்வாரிடம் சரணம் அடைந்தார்.

நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து, "நாம் பகவானை அனுபவித்தற்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களை நீர் ஓலைப்படுத்தும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.மதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.

"மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்"
என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.

மதுரகவியாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று. நாளடைவில் நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்று தொடங்குவதால் அதற்கு "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்பது பெயராயிற்று.

நம்மாழ்வார் பெயரை உரைக்கும் மாத்திரத்திலே தன் நாவில் அமுதம் ஊறுகின்றது என்றும் ("தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே ..."), "இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் ஏத்த அருளினான்" என்றும் நம்மாழ்வாரின் புகழையே பாடிக் களித்து, மதுரகவியார் தமது ஆசார்யரான நம்மாழ்வாரிடம் ஆழங்கால் பட்டு "மதுரகவி ஆழ்வார்" ஆனார்.

இவருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள். எனினும் நாளடைவில் அவை வழக்கில் இருந்து காணாமல் போயின. பின்னாளில் ஆசார்யர் நாதமுனிகள், குருகூரை அடைந்து இவரது மரபில் வந்த சீடர்களிடம் "கண்ணிநுண் சிறுதாம்பு" பிரபந்தத்தை (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு, அதனை பன்னிரண்டு ஆயிரம் முறை ஓதி நம்மாழ்வார் அருளினைப் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீட்டார் என்பது வைணவ சம்பிரதாயம்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாராயண நிகழ்ச்சி(51)

 

அன்புடையீர்,

26 ஆந் தேதி, வியாழக் கிழமை அன்று, காலை 11 மணி அளவில், மாமி (திருமதி. சௌபாக்கிய லக்ஷ்மி) ஆரம்பித்து, ஸ்ரீ விஜயராகவன் சுவாமிகள் முன்னின்று 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' பாராயணம் - சுமார் 150 பேர் பங்கேற்புடன் - நடை பெற்றது.

பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, முதலில் நன்றாக நடைபெற மதுரகவி ஆழ்வார் அருள் வேண்டி ஆழ்வார் தனியனுடன்(அவித விஷயாந்தர) ஆரம்பிக்கப்பட்டது.  பின்னர் இசையுடன் கூடிய 'தேவ கான' - கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடலை அனைவரும் பாடினோம். பின்னர் சந்தை முறைக்கு மாறிய போது 'கண்ணிநுண்' இருமுறையும், 'அன்பன் தன்னை' இருமுறையும், மற்ற பாடல்கள் ஒரு முறையுமாக ஸேவிக்கப் பெற்றது. ஒவ்வொரு 10 பாராயண முடிவில் (10 x 120 = 1200 ) - ஒரு திருவாய்மொழி பாடல் - (உ-ம்) - முதலில் 'உயர்வற உயர்நலம்' பாடப் பெற்றது. முடிவில், 'முனியே நான்முகனே' - என்று தொடங்கி 'அவாவறச் சூழ்' வழியாக - உயர்வற உயர்நலம் - அடைந்து - மீண்டும் கண்ணிநுண் சிறுத்தாம்பில் - முடிவு பெற்றது. சந்தை முறையில் அனைவரும் ஸேவிக்க வசதியாக, பல மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலயாளம், ஹிந்தி) பாசுரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. கோயிலுக்கு வருகை புரிந்த அன்பர்களுக்கு பள்ளிச் சிறுமியர் சிலர் இந்தப் பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

ஆச்சர்யம் ! ஆழ்வார் அருள் தானோ ! இராமானுஜர் அருள் தானோ ! சடகோபர் அருள் தானோ !

முதல் பத்து முறை ஸேவித்து முடிக்கும் முன்னர் நூற்றிருபதுக்கும் மேலான அடியார்கள் வருகை தந்திருந்தனர்.

நடுவே தேவகானம்  ஏற்பாடு - கண்ணிநுண் சிறுத்தாம்பு - பிரார்த்தனைக்கு பதிலாகவும், மனதிற்கு மிக நெகிழ்ச்சியாகவும் இருந்தது, முதலில் சற்று மெதுவாக தொடங்கி, முடிவில் சற்று விரைந்து, அதே சமயம் தெளிவுடன் பிரார்த்திக்கப் பட்டது.

முடிவில், நமது ஆசார்யன் மற்றும் குருவின் அருளால், பக்தர்களின் பங்கேற்ப்பினால், வார்த்தைகளால் விவரிக்க முடியாத மன நிறைவுடன் முடிந்தது. மனதில், அடுத்த முறை எங்கே எப்போது சொல்லலாம் என மனம் எதிர் பார்க்கத் தொடங்கி விட்டது.

ஸ்ரீ ரங்காச்சாரி சுவாமிகள், அவர்கள் மிக அழகாக உரையாற்றினார்.

அதன் பின்னே பிரசாதம் விநியோகம்

கூடியிருந்து குளிர்ந்தோம்

வெகு நேரம் மனது - கண்ணிநுண் சிறுத்தாம்பை - அசை போட்டவண்ணம் -

நுண்ணதிர்வுகள் (vibrations) ஞான மண்டபம் எங்குமென அமைதியில் ரகசியமாக உரைத்து கொண்டிருந்தன.

இந்த நிகழ்ச்சி நடக்க பலர் உதவினார்கள்.

ஸ்ரீமதி ரமா ராஜன் அவர்கள் ஏற்பாடுகளுக்கு,

திரு சம்பத் அவர்கள் - transport இற்கு

திரு சுப்பிரமணி அவர்கள் செய்த பல உதவிகள்

திரு வேங்கட கண்ணன் அவர்கள் செய்ய உதவிய பல மொழி 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' பிரசுரத்திற்கு

அனந்து கோஷ்டியினர் - நிகழ்ச்சிக்கு பின் செய்த பணிகளுக்கு

sai-garden மற்றும் ஆண்டாள் கோஷ்டியினர் இன்னும் பலர் - நிகழ்ச்சி செவ்வனே நடந்ததற்கு

நன்றிகள் பல !

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

 

திருமால் நாமாவளி-ஆண்டாள் படி(1)(49)

(திருப்பாவை - 1 )

1 . நந்தகோபன் குமரன்

2 . யசோதை இளஞ்சிங்கம்

3 . கார்மேனியன்

4 . செங்கண்(ணன்)

5 . கதிர் மதிய முகத்தான்

6 . நாராயணன்

(திருப்பாவை - 2 )

7 . பாற்கடலில் பையத் துயின்றோன்

8 . பரமன்

(திருப்பாவை - 3 )

9 . ஓங்கி உலகளந்தோன்

10 . உத்தமன்

(திருப்பாவை - 4 )

11 . ஆழி மழைக் கண்ணன்

12 . ஊழி முதல்வன்

13 . பாழியந் தோளுடையோன்

14 . பற்பநாபன் (பத்மநாபன்)

(திருப்பாவை - 5 )

15 . மாயன்

16 . வடமதுரை மைந்தன்

17 . யமுனைத் துறைவன்

18 . ஆயர் குலத்தோன்

19 . அணி விளக்கு

20. தாயைக் குடல் விளக்கம் செய்தோன்

21 . தாமோதரன்

22. போய பிழையும் புகு தருவான்

(திருப்பாவை - 6 )

21 . புள்ளரையன்

22 . பேய் முலை நஞ்சுண்டான்

23 . கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சியவன்

24 . வெள்ளத்தரவில் துயில் அமர்ந்தோன்

25 . வித்து

(திருப்பாவை - 7 )

26 . நாராயணன் மூர்த்தி

27 . கேசவன்

(திருப்பாவை - 8 )

28 . மாவாய் பிளந்தான்

29 . மல்லரை மாட்டியோன்

30 . தேவாதி தேவன்

(திருப்பாவை - 9 )

31 . மா மாயன்

32 . மாதவன்

33 . வைகுந்தன்

34 . நாமம் பல உடையோன்

(திருப்பாவை - 10 )

35 . நாற்றத் துழாய் முடியன்

36 . நாராயணன்

37 . போற்ற பறை தருவான்

38 . புண்ணியன்

(திருப்பாவை - 11 )

39 . குற்றம் ஒன்று இல்லாதவன்

40 . கோவலன்

41 . முகில் வண்ணன்

(திருப்பாவை - 12 )

43 . தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்

44 . மனதுக்கினியான்

(திருப்பாவை - 13 )

45 . புள்ளின் வாய் கீண்டான்

46 . பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

(திருப்பாவை - 14 )

47 . சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

48 . பங்கயக் கண்ணான்

(திருப்பாவை - 15 )

49 . வல் ஆனை கொன்றான்

50 . மாற்றாரை மாற்றழிக்க வல்லான்

51 . மாயன்

(தொடரும்)

தேவகான நிகழ்ச்சி(50)

தை மாதம் சென்ற ஞாயிற்று கிழமை நடைப்பெற்ற தேவகான நிகழ்ச்சி - காணொளிக்கான சுட்டி.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

பாடசாலை செய்தி பத்திரிக்கை - அக்டோபர் 2012(45)

समसतजननीं वन्दे चैतन्यस्तन्यदायिनीम् |
श्रेयसीं श्रीनिवासस्य करुणामिव रूपिणीम् ||

(श्रीदयाशतकम् - 6)

ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதன்ய ஸ்தன்யதாயினீம் |
ஷ்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம் ||
(ஸ்ரீ தயா சதகம் - 6)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, அக்டோபர் 2012

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஏப்ரல் 2012(46)

அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான்; அது நமது விதிவகையே
இருள் தருமா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்;
மருள் ஒழி நீ மடநெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே.
(திருவாய்மொழி - 10.6.1)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2012

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஃபிப்ரவரி 2012(47)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஃபிப்ரவரி 2012

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

கைம்மான மதயானை(43)

பெரிய திருமொழி
(எட்டாம் பத்து - ஒன்பதாம் திருமொழி)
திருக்கண்ணபுரம்

கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்துய்ந்து போனேனே. (1)

தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை, அணியுருவின்
திருமாலை, அம்மானை, அமுதத்தைக் கடல் கிடந்த
பெருமானை அடியேன் அடைந்துய்ந்து பிழைத்தேனே. (2)

விடையேழ் அன்றடர்த்து வெகுண்டு விலங்கலுற
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? (3)

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (4)

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் ! போயறியாய்; இதுவே அமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா ! உன்னை என்றும் மறவாமை பெற்றேனே. (5)

எஞ்சா வெந்நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை
நெஞ்சே ! நீ நினையாது இறைப் பொழுதும் இருத்திக் கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே. (6)

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை
முற்றா மாமதிகோள் விடுத்தானை, எம்மானை
எத்தால் யான் மறக்கேன் ? இதுசொல் என் ஏழை நெஞ்சே ! (7)

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன், பிறந்த பின்னை
வற்றா நீர் வயல்சூழ் வயலாலியம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே. (8)

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கன்றது இங்கு என்று கொலோ? (9)

செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்
கருநீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை
இருநீரின் தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் !
வருநீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினோ ! (10)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.