Responsive image

தொண்டரடிப்பொடி_ஆழ்வார்

திருமாலை 1

பாசுர எண்: 872

பாசுரம்
காவலிற் புலனை வைத்துக்
      கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம்
      நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த
      முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய்
      அரங்கமா நகரு ளானே. (1)

திருமாலை 2

பாசுர எண்: 873

பாசுரம்
பச்சைமா மலைபோல் மேனி
      பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே.
      ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
      இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
      அரங்கமா நகரு ளானே. (2)

திருமாலை 3

பாசுர எண்: 874

பாசுரம்
வேதநூல் பிராயம் நூறு
      மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்
      நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும்
      பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
      அரங்கமா நகரு ளானே. (3)

திருமாலை 4

பாசுர எண்: 875

பாசுரம்
மொய்த்தவல் வினையுள் நின்று
      மூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றே
      பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க்
      கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ.
      பிறவியுள் பிணங்கு மாறே. (4)

திருமாலை 5

பாசுர எண்: 876

பாசுரம்
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
      பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது
      உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன்
      தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத்
      தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)

திருமாலை 6

பாசுர எண்: 877

பாசுரம்
மறம்சுவர் மதிளெ டுத்து
      மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம்
      புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற
      அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து
      புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)

திருமாலை 7

பாசுர எண்: 878

பாசுரம்
புலையற மாகி நின்ற
      புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர்
      காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன்
      சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற
      தேவனே தேவ னாவான். (7)

திருமாலை 8

பாசுர எண்: 879

பாசுரம்
வெறுப்பொடு சமணர் முண்டர்
      விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
      போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்
      கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய்
      அரங்கமா நகரு ளானே. (8)

திருமாலை 9

பாசுர எண்: 880

பாசுரம்
மற்றுமோர் தெய்வ முண்டே
      மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள்
      ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர்
      அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை
      கழலிணை பணிமி னீரே. (9)

திருமாலை 10

பாசுர எண்: 881

பாசுரம்
நாட்டினான் தெய்வ மெங்கும்
      நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம்
      உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள்.
      கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச்
      செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)
882:
ஒருவில்லா லோங்கு முந்நீர்
      அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச்
      செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில்
      மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர்.
      காலத்தைக் கழிக்கின் றீரே. (11)

Enter a number between 1 and 4000.