Responsive image

முதல்_திருவந்தாதி

முதல் திருவந்தாதி 91

பாசுர எண்: 2172

பாசுரம்
ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், - ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான்?      91

முதல் திருவந்தாதி 92

பாசுர எண்: 2173

பாசுரம்
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு?      92

முதல் திருவந்தாதி 93

பாசுர எண்: 2174

பாசுரம்
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று?      93

முதல் திருவந்தாதி 94

பாசுர எண்: 2175

பாசுரம்
செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
இறையேனும் ஏத்தாதென் நா.       94

முதல் திருவந்தாதி 95

பாசுர எண்: 2176

பாசுரம்
நாவாயி லுண்டே நமோநார ணா என்று,
ஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
தீக்கதிக்கட் செல்லும் திறம்?       95

முதல் திருவந்தாதி 96

பாசுர எண்: 2177

பாசுரம்
திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி.       96

முதல் திருவந்தாதி 97

பாசுர எண்: 2178

பாசுரம்
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்?      97

முதல் திருவந்தாதி 98

பாசுர எண்: 2179

பாசுரம்
பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்.       98

முதல் திருவந்தாதி 99

பாசுர எண்: 2180

பாசுரம்
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர்.       99

முதல் திருவந்தாதி 100

பாசுர எண்: 2181

பாசுரம்
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை.       100

Enter a number between 1 and 4000.