சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்;
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ !
பாயிருள் அகன்றது, பைம்பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 3)

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன; வயலுள்
இரிந்தன சுரும்பினம்; இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே !
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 4)

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்;
போயிற்றுக் கங்குல்; புகுந்தது புலரி;
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்;
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர்; ஆதலில், அம்மா !
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 5)

இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ !
இறையவர் பதினொரு விடையரும் இவரோ !
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ !
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 6)

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ !
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவரோ !
எம்பெருமான் ! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர்; திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை, மற்று இதுவோ !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 7)

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ !
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி;
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்;
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 8)

ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்;
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 9)

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ !
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ !
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர், சூழ் புனல் அரங்கா !
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 10)

சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கண் உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மாவண்டு பாட மாமயில் ஆட அரங்கத்து அம்மான் திருவயிற்று
உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
(அமலனாதிபிரான் - 4)

பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.