அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்

செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும்

ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி

எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்,

வாயினால் நமோ நாரணா என்று

மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப்

போயினால் பின்னை இத் திசைக்கு என்றும்

பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து

ஆர் வினவிலும் வாய் திறவாதே

அந்த காலம் அடைவதன் முன்னம்,

மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி

ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு

அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மேல்எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து

மேல் மிடற்றினை உள் எழ வாங்கிக்

காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்

கண் உறக்கமது ஆவதன் முன்னம்,

மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை

மூன்று மாத்திரை உள் எழ வாங்கி

வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்,

விண்ணகத்தினில் மேவலும் ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மடி வழி வந்து நீர் புலன்சோர

வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே

கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்

கண் உறக்கமது ஆவதன் முன்னம்,

தொடைவழி உம்மை நாய்கள் கவரா

சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்

இடைவழியில் நீர் கூறையும் இழவீர்

இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி

ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச்

சங்கம் விட்டு அவர் கையை மறித்துப்

பையவே தலை சாய்ப்பதன் முன்னம்,

வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி

மாயனை மதுசூதனை மார்பில்

தங்க விட்டு வைத்து ஆவது ஓர் கருமம்

சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தென்னவன் தமர் செப்பம் இலாதார்

சே அதக்குவார் போலப் புகுந்து

பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப்

பின் முன் ஆக இழுப்பதன் முன்னம்,

இன்னவன் இனையான் என்று சொல்லி

எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி

மன்னவன் மதுசூதனன் என்பார்,

வானகத்து மன்றாடிகள் தாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து

பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு

நரிப் படைக்கு ஓர் பாகுடம் போலே

கோடி மூடு எடுப்பதன் முன்னம்,

கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு

கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால்,

குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப

வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்

தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம்

தாரமும் ஒரு பக்கம் அலற்ற

தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம்,
செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
ஆய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு,
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செத்துப் போவதோர் போது நினைந்து

செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்

பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்

செய்த மாலை இவை பத்தும் வல்லார்

சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல்

சென்ற சிந்தை பெறுவர் தாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காசும் கறை உடைக் கூறைக்கும்

அங்கு ஓர் கற்றைக்கும்

ஆசையினால் அங்கு அவத்தப்

பேர் இடும் ஆதர்காள் !

கேசவன் பேர் இட்டு நீங்கள்

தேனித்து இருமினோ,

நாயகன் நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.