Responsive image

மூன்றாம்_திருவந்தாதி

மூன்றாம் திருவந்தாதி 41

பாசுர எண்: 2322

பாசுரம்
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ. 41

மூன்றாம் திருவந்தாதி 42

பாசுர எண்: 2323

பாசுரம்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி
அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம். 42

மூன்றாம் திருவந்தாதி 43

பாசுர எண்: 2324

பாசுரம்
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, - தனமாகப்
பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு. 43

மூன்றாம் திருவந்தாதி 44

பாசுர எண்: 2325

பாசுரம்
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி. 44

மூன்றாம் திருவந்தாதி 45

பாசுர எண்: 2326

பாசுரம்
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை. 45

மூன்றாம் திருவந்தாதி 46

பாசுர எண்: 2327

பாசுரம்
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரான். 46

மூன்றாம் திருவந்தாதி 47

பாசுர எண்: 2328

பாசுரம்
நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ. 47

மூன்றாம் திருவந்தாதி 48

பாசுர எண்: 2329

பாசுரம்
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று? 48

மூன்றாம் திருவந்தாதி 49

பாசுர எண்: 2330

பாசுரம்
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச்
சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49

மூன்றாம் திருவந்தாதி 50

பாசுர எண்: 2331

பாசுரம்
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன். 50

Enter a number between 1 and 4000.