Responsive image

நம்மாழ்வார்

திருவிருத்தம் 11

பாசுர எண்: 2488

பாசுரம்
அரியன யாமின்று காண்கின்றன,கண்ணன் விண்ணனையாய்.
பெரியன காதம் பொருட்கோபிரிவெனெ, ஞாலமெய்தற்
குரியென வெண்முத்தும் பைம்பொன்னு மேந்தியொ ரோகுடங்கைப்
பெரியென கெண்டைக் குலம்,இவை யோவந்து பேர்கின்றவே? 11

திருவிருத்தம் 12

பாசுர எண்: 2489

பாசுரம்
பேர்கின் றதுமணி மாமை, பிறங்கியள் ளல்பயலை
ஊர்கின் றதுகங்குல் ஊழிகளே,இதெல் லாமினவே
ஈர்கின்ற சக்கரத் தெம்பெருமான்கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சி னார்,தந்து போன் தனிவளமே. 12

திருவிருத்தம் 13

பாசுர எண்: 2490

பாசுரம்
தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே. 13

திருவிருத்தம் 14

பாசுர எண்: 2491

பாசுரம்
ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே
சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர்
தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே? 14

திருவிருத்தம் 15

பாசுர எண்: 2492

பாசுரம்
கயலோ _மகண்கள்? என்று களிறு வினவிநிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. 15

திருவிருத்தம் 16

பாசுர எண்: 2493

பாசுரம்
பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும்,கண்ணன் விண்ணனையாய்.
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்து,அம்ம வாழியிப் பாயிருளே. 16

திருவிருத்தம் 17

பாசுர எண்: 2494

பாசுரம்
இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநாயிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே. 17

திருவிருத்தம் 18

பாசுர எண்: 2495

பாசுரம்
கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனாலிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொலோ புயற் காலங்கொலோ.
கடல்கொண்ட கண்ணீர், அருவிசெய் யாநிற்கும் காரிகையே. 18

திருவிருத்தம் 19

பாசுர எண்: 2496

பாசுரம்
காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே. 19

திருவிருத்தம் 20

பாசுர எண்: 2497

பாசுரம்
சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம்,இந் நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது வேல.நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை மீர் உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலயந் தண்ணந்துழாய்கொண்டு சூட்டுமினே. 20

Enter a number between 1 and 4000.