Responsive image

இரண்டாம்_திருவந்தாதி

இரண்டாம் திருவந்தாதி 11

பாசுரம்
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்? 11

இரண்டாம் திருவந்தாதி 12

பாசுரம்
அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12

இரண்டாம் திருவந்தாதி 13

பாசுரம்
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13

இரண்டாம் திருவந்தாதி 14

பாசுரம்
பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14

இரண்டாம் திருவந்தாதி 15

பாசுரம்
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15

இரண்டாம் திருவந்தாதி 16

பாசுரம்
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16

இரண்டாம் திருவந்தாதி 17

பாசுரம்
மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17

இரண்டாம் திருவந்தாதி 18

பாசுரம்
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு. 18

இரண்டாம் திருவந்தாதி 19

பாசுரம்
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி. 19

இரண்டாம் திருவந்தாதி 20

பாசுரம்
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம். 20

Enter a number between 1 and 4000.